மதுரை: உலக அளவில் விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடாகளுள் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்த நிலை மாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் 'நம்மைக் காக்கும் 48' திட்டம் குறித்தும் அரசின் திட்டங்களின் பயன்கள் குறித்தும் விபத்து அவசர சிகிச்சையிலும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் முக்கியப் பங்காற்றி வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை விபத்து அவசர சிகிச்சைத்துறையின் தலைவராகப் பணியாற்றி வரும் டாக்டர் கே.பி.சரவணக்குமார் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார்.
இதில் அவர், “நம்மைக் காக்கும் 48' என்ற திட்டத்தை மிகச் சிறப்பாக நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டம் தமிழக அரசால் மிக சீரிய தொலைநோக்குப் பார்வையுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தேசிய அளவில் மிகவும் பாராட்டுப்பெற்றுள்ளது. சாதாரண குடிமகனுக்கு விபத்து ஏற்பட்டு அடிபட நேர்ந்தால், முதல் 48 மணி நேரத்திற்கான அவரது முழுச் செலவையும் ஒரு லட்ச ரூபாய் வரை தமிழ்நாடு அரசே ஏற்கிறது”.
“இந்த திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழக முதல்வரால் அறிமுகம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து தற்போது வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 11 ஆயிரத்து 237 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் 14 கோடியே 34 லட்சத்து 45 ஆயிரத்து 560 ரூபாய் மதிப்புள்ள அவசர சிகிச்சை சிறப்பான முறையில் வழங்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட மேற்கண்ட நோயாளிகள் அனைவரும் நலமுடன் உள்ளனர்”.
உறுப்பு தான அறுவை சிகிச்சை:
அதேபோன்று எங்களது துறையின் சார்பாக கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்தே உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உறுப்புதான திட்டத்தை கடந்த 2017ஆம் ஆண்டு துவக்கினோம். இந்த திட்டங்களின் வாயிலாக கடந்த ஜனவரி மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை, 13 நபர்கள் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவர்களது உறுப்புகள் தேவைப்படுகிற பிற நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டு அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
பிற மருத்துவக் கல்லூரிகளில் மூளைச்சாவு அடைந்த 35 பேரிடமிருந்து உறுப்பு தானம் பெறப்பட்டு, ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. தோல் 9 பேரிடமிருந்து எடுக்கப்பட்டு தீக்காய சிகிச்சை பெற்று வந்த பல நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. பொதுவாக முடநீக்கியல் துறையில் அறுவை சிகிச்சை பெற்ற 33 நோயாளிகளிடமிருந்து நீக்கப்பட்ட எலும்புகள் பெறப்பட்டு, உரியவர்களுக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "காலநிலை மாற்றம் மனிதர்கள் எதிர்கொள்ளும் மாபெரும் சவால்" - முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்!
அது தவிர, இறந்து போன 39 நபர்களிடமிருந்து எலும்புகள் பெறப்பட்டுள்ளன. இந்த எலும்புகள் அனைத்தும் பல நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்குப் பயனளித்துள்ளது. உடம்பில் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யும்போது பாதிக்கப்படும் எலும்புகள், விபத்து நேர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் எலும்பு பாதிப்பு, இவர்களுக்கெல்லாம் பெறப்படும் எலும்புகள் பயன்படுத்தப்படுகின்றன. நம்மைக்காக்கும் 48 திட்டம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாட்டிலேயே மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைதான் தலை சிறந்து விளங்குகிறது. இதற்கான பரிசுகளையும், விருதுகளையும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பெற்றுள்ளோம்.
தாமதமின்மையே நோக்கம்:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தாய் என்ற திட்டத்தின் (Tamilnadu Accident and Emergency Care Initiative - TAEI) வாயிலாக இயங்குகிறது. உலகத்திலேயே விபத்துக்களின் வாயிலாக உடற்காயமும், மரணமும் ஏற்படுவது இந்தியாவிலும், இந்தியாவில் தமிழகத்திலும்தான் அதிகமாக நிகழ்கிறது. இதனைத் தவிர்ப்பதற்காகத்தான் தமிழக அரசு தாய் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: விஜய் பங்கேற்கும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? - திருமாவளவன் விளக்கம்!
தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. தாமதமின்மைதான் (Zero Delay) இதன் தாரக மந்திரம். விபத்திலோ, அடிபட்டோ மருத்துவமனைக்கு வருகிறார் என்றால், உடனடியாக அவருக்கு உரிய, எல்லாவிதமான சிறப்பு அவசர சிகிச்சையை வழங்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் தலையாய நோக்கம்.
தீவிரத்தைப் பொறுத்து சிகிச்சை:
இந்த அடிப்படையில் வரக்கூடிய நோயாளியை, அவருக்கு நேர்ந்த விபத்து மற்றும் காயங்களின் தீவிரத்தைப் பொறுத்து சிவப்பு, மஞ்சள், பச்சை என மூன்று மண்டலங்களாகப் பிரித்து சிகிச்சை வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நபர்களைக் காப்பாற்ற சிகிச்சை மேற்கொள்கிறோம்.
இதையும் படிங்க: பல்லாவரம் குடிநீரில் கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் விவகாரம்: பாதிக்கப்பட்டோர் குற்றச்சாட்டும், அமைச்சரின் விளக்கமும்!
இதில் 108 அவசர ஊர்தியின் பங்களிப்பும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த தாய் திட்டம் தொடங்கியதிலிருந்து தற்போது வரை பல ஆயிரக்கணக்கானோரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ராஜாஜி மருத்துவமனையில் மட்டுமன்றி, தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்தவமனைகளில் நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். இதற்காக முழு மூச்சுடன் இயங்கும் தேசிய மற்றும் தமிழக சுகாதாரத் துறைக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றி” என்றார்.