மதுரை: நாகர்கோவில் - கோயம்புத்தூர் விரைவு ரயிலில், நேற்றைய முன்தினம் (அக்.16) மேல் படுக்கை (Upper Berth) எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், 4 வயது சிறுவன் தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அக்டோபர் 16ஆம் தேதி நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்பட்டுச் சென்ற எக்ஸ்பிரஸ் வண்டி எண் - 22667-ல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டனர்.
வாஞ்சி மணியாச்சியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வாஞ்சி மணியாச்சியில் அவர்கள் ஏறிய 5 நிமிடத்தில், பாதுகாப்புச் சங்கிலி சரியாகப் பொருத்தப்படாததால், நான்கு வயது குழந்தை மீது பெர்த் விழுந்தது. இதைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அளித்த தகவலின் பெயரில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில், குழந்தைக்கு தையல் மற்றும் மருத்துவமனை பராமரிப்பு தேவை என்று தீர்மானிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் ரயில் படுக்கை சரிந்து சிறுவன் படுகாயம்.. நாகர்கோவில் - கோவை ரயிலில் அதிர்ச்சி!
குழந்தையை கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் குறித்து குழந்தையின் தாயாருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் கோவில்பட்டி அல்லது விருதுநகரில் இறங்க மறுத்துவிட்டார். பின்னர், மதுரை ரயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ்-க்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தையின் தாயார் ரயில்வே போலீசார் உதவியோடு அவசரமாக மதுரை ரயில் நிலையத்தை விட்டு புறப்பட்டுச் சென்றார்.
அதன் பிறகு சம்பவம் நடைபெற்ற ரயில் பெட்டியில் ஆய்வு மேற்கொண்ட போது, தொழில்நுட்பக் கோளாறுகள் எதுவும் இல்லை என்பதும், நடு படுக்கையின் பாதுகாப்புச் சங்கிலி சரியாக பொருத்தப்படாத காரணத்தால் தான் இந்த விபத்து நடந்துள்ளது எனவும் தெரிய வந்தது. எனவே, மதுரை ரயில்வே கோட்டம் எப்பொழுதும் பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து 24 மணி நேரமும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.
இந்த நிதியாண்டில் மட்டும் இதுபோன்ற 193 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. ரயில் பயணிகளுக்கான சேவையையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவதில் தொடர்ந்து மதுரை ரயில்வே கோட்டம் உறுதியாக உள்ளது. இதற்காக பயணிகளின் பாராட்டையும் பெற்றுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்