மதுரை: நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடக்கவுள்ளது. இந்த நிலையில் அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும், "எம்பியை காணவில்லை.. கண்டா வர சொல்லுங்க" என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டி நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று திருச்சியில், எம்பியை காணவில்லை என்ற போஸ்டர் விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட எம்பி திருநாவுகரசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "நான் என்ன அமெரிக்காவிலான இருக்கிறேன் இதே திருச்சியில் தான் இருக்கேன் யார் என்னை பார்க்க வேண்டுமோ அவர்கள் நேரில் வாருங்கள்" என நகைச்சுவையாக பதில் அளித்தார்.
தேர்தல் போஸ்டர் யுத்தம்: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவும், அதிமுகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி கொண்டு இருப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இரு கட்சிகளும் மாறி மாறி போஸ்டர்களை ஒட்டி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எங்கள் தொகுதி எம்பியை காணவில்லை அவரை 'கண்டா வரச் சொல்லுங்க' எனும் போஸ்டர்களை அதிமுகவும், கண்டா வரச் சொல்லுங்க.. கூட்டணி வைக்க ஆட்கள் தேவை என அதிமுகவை கிண்டல் செய்து திமுகவும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றன.
அந்த வகையில், மதுரை எம்பியை காணவில்லை, என்ற போஸ்டர் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது. இதனை பார்த்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன், அந்த போஸ்டர் அருகே நின்று புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பங்கங்களில் 'i am waiting' எனப் பதிவிட்டுள்ளார். மேலும் #கையோடுகூட்டிவாருங்க என்ற ஹேஸ்டேக் உடன் பதிவிட்டுள்ளார்.
காணவில்லை என ஒட்டப்பட்ட போஸ்டருக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்ததோடு அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட எம்பியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:மார்ச் 3-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்: கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!