மதுரை: இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான மீனாட்சி திருக்கல்யாணம், ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறும் இடமாக மதுரை மாநகர் இருந்து வருகிறது. குறிப்பாக, மதுரையின் பிரசித்தி பெற்ற கோயிலான மீனாட்சி அம்மன் கோயிலில், ஒவ்வொரு மாதமும் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை. அதில், ஆண்டுக்கு ஒருமுறை வரும் சித்திரைப் பெருவிழா மிக முக்கிய விழாவாக மதுரை மக்களால் கொண்டாடப்படுகிறது.
சித்திரை மாதத்தில் நடைபெறும் இந்த சித்திரைத் திருவிழா, தென்தமிழகத்தில் நடைபெறும் மிகவும் தொன்மையான ஒரு விழாவாக திகழ்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த சித்திரை திருவிழா, ஏப்ரல் 23ஆம் தேதி தீர்த்தம் மற்றும் தேவேந்திர பூஜையுடன் நிறைவு பெறவிருக்கிறது. இந்த திருவிழா நடைபெறும் 12 நாட்களும், அம்மனும், சுவாமியும் பல்வகை வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவர்.
இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக 8வது நாள் அன்று (ஏப்ரல் 19) மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். மீனாட்சி அம்மன் மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று, சித்திரை முதல் ஆவணி வரை நான்கு மாதங்கள், மதுரையில் அம்மன் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம். ஒன்பதாம் நாளன்று (ஏப்ரல்.20) மீனாட்சி அம்மன் திக் விஜயம் நடைபெறும். இதைத் தொடர்ந்து பத்தாம் நாளன்று (ஏப்ரல்.21) மீனாட்சி சுந்தரேசுவரர்-க்கு திருக்கல்யாணம் நடைபெறும் என மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: “எனக்கு பேச சொல்லிக் கொடுத்தது என் ஆசான் கருணாநிதி” - குஷ்பூவின் முழு விளக்கம் என்ன?