மதுரை: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் 11 உப கோயில்களுக்கு, மாதந்தோறும் உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வருகை தரும் பக்தர்கள், தங்கம், வெள்ளி மற்றும் பணம் போன்றவற்றை, கோயில் உண்டியல்களில் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம்.
இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் மாதந்தோறும் நடைபெறும். அந்த வகையில், பிப்ரவரி மாதத்திற்காக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (பிப்.29) நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தன்னார்வலர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இதில், உண்டியல் வருமானமாக ரொக்கம் ரூ. 1 கோடியே 18 லட்சத்து 3 ஆயிரத்து 573 ரூபாயும், தங்கம் 415 கிராம், வெள்ளி ஆயிரத்து 143 கிராம் மற்றும் அயல்நாட்டு ரூபாய் நோட்டுக்கள் 534 காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் நீட்டிப்பு - பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு