மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த அசோக் குமார், முருகன் மற்றும் விக்னேஷ் குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "சப் ஜெயிலர் பணியிடத்திற்காக டிஎன்பிஎஸ்சி தரப்பில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த ஜூலை 1ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. நாங்கள் முறையாக பயிற்சி பெற்று நன்றாக தேர்வு எழுதிய நிலையில், எதிர்பார்த்ததை விட குறைவான மதிப்பெண்களே கிடைக்கப் பெற்றது. இதில் ஏதேனும் முறைகேடுகள் எழுந்திருக்கலாம் என சந்தேகம் வருகிறது. ஆகவே ஜெயிலர் தேர்வின் கணினி அடிப்படையிலான எங்களது விடைத்தாள் நகல், தற்காலிக மற்றும் இறுதியான அரசின் விடை குறிப்புகள் ஆகியவற்றைத் தர டிஎன்பிஎஸ்சிக்கு உத்தரவிட வேண்டும்.
அதோடு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான முடிவுகள் எடுக்கவும் தடை விதித்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, "மனுதாரர்களுக்கு கணினி அடிப்படையிலான விடைத்தாளின் நகலை ஒரு வார காலத்திற்குள் வழங்க வேண்டும்.
மனதாரர் தகுதியான மதிப்பெண்களை பெற்றால், நியமனம் தொடர்பான பிரச்சனை எழும். ஆகவே தற்போது நியமனம் தொடர்பான விவகாரத்தில் எத்தகைய உத்தரவையும் பிறப்பிக்க இயலாது" எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: தலைமை செயலக பணியாளர்கள் நீதிமன்ற வழக்கு பணியாற்ற எதிர்ப்பு! என்ன காரணம்?