மதுரை : கரூரைச் சேர்ந்த ராஜ்கபூர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த 2021ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "கரூர் மாவட்டத்தில் அரசு ஹாஜியாக சிராஜுதீன் அகமத் ரஷாதி என்பவர் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய நியமனத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதால் அவருடைய நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், "கரூர் மாவட்டத்தில் கடந்த 2021ம் ஆண்டு அரசு டவுன் ஹாஜி பணியிடம் காலியானது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரால் டவுன் ஹாஜி நியமனம் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது. எட்டு நபர்கள் டவுன் ஹாஜி பணியிடத்திற்காக விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 3 நபர்களை தேர்வு செய்து தேர்வு குழு மாவட்ட ஆட்சியரிடம் அது தொடர்பான விவரங்களை வழங்கியது.
இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் சிராஜுதீன் அகமத் ரஷாதி அரசு டவுன் ஹாஜியாக நியமனம் செய்யப்பட்டார். தேர்வுக்குழு அளித்த பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் சிராஜுதீன் அகமது கரூர் மாவட்ட அரசு ஹாஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை எதிர்த்து இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது தேர்வு குழுவின் பரிந்துரை பட்டியலில் இடம்பெறாத நபர் எவ்வாறு ஹாஜியாக தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. ஆனால் எந்தவித ஆவணங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதையும் படிங்க : கருணாநிதியே போயிட்டாரு; அப்புறம் எதுக்கு பேனா சிலை? ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு சிவி சண்முகம் பதிலடி!
தேர்வு குழுவின் பரிந்துரையில் இருந்த இரண்டு நபர்களுக்கு குழுவின் பெரும்பான்மையான நபர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் ஹாஜியாக தேர்வு செய்யப்பட்டவருக்கோ அவரது மகனை தவிர வேறு ஏவரும் ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் அவர் எவ்வாறு ஹாஜியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை.
இது தொடர்பான ஆவணங்கள் எதுவும் தமிழக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்படவில்லை. மாவட்ட ஹாஜியின் நியமனம் செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என்றாலும் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
ஹாஜி நியமனம் தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர் அமைச்சகத்தால் வழிகாட்டு நெறிமுறைகள் எதுவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பான விபரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. சிராஜுதீன் அகமத் ரஷாதி கரூர் மாவட்ட ஹாஜியாக நியமனம் செய்யப்பட்டது சரியானது என்பது தொடர்பாக எவ்விதமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாததால் அவருடைய நியமனம் ரத்து செய்யப்படுகிறது.
இரண்டரை ஆண்டுகளாக கரூர் மாவட்ட ஹாஜியாக பணியாற்றிய நபரது நியமனம் சட்டவிரோதமானது என அறிவிப்பது துரதிஷ்டவசமானது. எனவே சிராஜுதீன் அகமதுவை கரூர் மாவட்ட ஹாஜியாக நியமனம் செய்த தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. முறையான விதிகளை பின்பற்றி வெளிப்படை தன்மையுடன் கரூர் மாவட்ட ஹாஜி தேர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.