மதுரை: குற்றால அருவிக்கு வரும் பக்தர்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் உரிய வசதிகள் செய்து தரக் கோரி மதுரை வழக்கறிஞர் கிருஷ்ணசாமி என்பவர் கடந்த 2014ஆம் ஆண்டு தாக்கல் செய்த வழக்கு.
இந்த வழக்கை அப்போதைய நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வைத்தியநாதன் ஆகியோர், விசாரணை செய்து மூத்த வழக்கறிஞர் டிஎஸ்.வெங்கட்ரமணா மற்றும் வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் இருவரையும் வழக்கறிஞர் ஆணையராக நியமித்து குற்றாலத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது சம்பந்தமான ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
அதன் பேரில் வழக்கறிஞர் ஆணையர்கள் நேரடி ஆய்வு செய்து பல்வேறு பரிந்துரைகளை நீதிபதிகளிடம் அளித்தனர். அதனை ஏற்று நீதிபதிகளும், நிரந்தரமாக எண்ணெய் மசாஜ் தடை செய்தும், சோப்பு ஷாம்பு உள்ளிட்டவற்றை நிரந்தரமாகத் தடை செய்தும், குற்றாலம் ஊருக்குள் உள்ள டாஸ்மாக் கடைகளை ஊருக்கு வெளியே மாற்றுவது உள்ளிட்ட 43 உத்தரவுகள் பிறப்பித்திருந்தார்கள்.
மேலும், நீதிமன்ற ஆணையராக நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர் ஆணையர்களை ஆண்டுதோறும் நேரடியாகக் கள ஆய்வு செய்து அவ்வப்போது உயர்நீதிமன்றத்திற்கு அறிக்கையை அனுப்புமாறு உத்தரவிட்டு வழக்கை நிலுவையில் வைத்தார்கள்.
இதே போல் கோயில் கடைகளுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கு மற்றும் அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு வழக்கு என பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி விஜயகுமார் கங்காப்பூர்வாளா மற்றும் தனபால் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் ஆணையர்களின் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்திருந்தார்கள். அதில், தற்போது கோயில் சுற்றி உள்ள கடைகளை தீ விபத்து மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைப் பதிவு செய்த தலைமை நீதிபதி அமர்வு, சமீபத்தில் குற்றாலநாதர் கோயில் மதில் சுவரை ஒட்டி நடைபெற்ற தீ விபத்தைக் கருத்தில் கொண்டும், மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகக் கடைகள் எதையும் அமைக்கக் கூடாது என இடைக்கால உத்தரவிட்டதோடு, குற்றாலநாதர் கோயிலுக்கு எதிர் பகுதியிலும், கோயிலின் முன்புறம் உள்ள கடைகளை அப்புறப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் கூறி வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்கள்.
இதையும் படிங்க: டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!