மதுரை: வாங்கிய கடனை திருப்பி செலுத்திய பிறகும் வீட்டு அசல் பத்திரத்தை தர மறுக்கும் மதுரை மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த இந்திராணி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில்,
'மதுரை வாடிப்பட்டி கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில், வீட்டை அடமானம் வைத்து லோன் பெற்றிருந்தேன். கடன் தொகையை முழுவதுமாக செலுத்திய பின்பும், எனது அசல் ஆவணங்களை வழங்க மறுக்கின்றனர். இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே கடனுக்காக பிணயமாக பெற்ற எனது ஆவணங்களை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும' என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "மனுதாரர் அடமான கடனை முழுவதுமாக செலுத்தியுள்ளார். அவர் செலுத்திய கடன் தொகையை வாடிப்பட்டி கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலர் தவறாக பயன்படுத்தியுள்ளார். கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலர் செய்த தவறுக்கு மனுதாரர் எவ்வாறு பொறுப்பேற்பது" என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், வாடிப்பட்டி கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலர், துணைப் பதிவாளர் வழியாக, கூட்டுறவு வங்கிகளின் நிர்வாக இயக்குனருக்கு இதுதொடர்பான விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மனுதாரரின் அசல் ஆவணங்களை 8 வாரத்திற்குள் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியார் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை? தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு