மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில், தமுக்கம் மைதானத்தில் வரும் செப் 28, 29 ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ள தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் ’தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2024’ தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா பேசும்போது, "தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் Startup TN நிறுவனமானது புத்தொழில் மற்றும் புத்தாக்கத்திற்கான மாநில ஒருங்கிணைப்பு முகமையாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர் 2030ம் ஆண்டுக்குள் டிரில்லியன் டாலர் மாநிலப் பொருளாதாரம் என்பதை இலக்காகக் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இத்தகைய தொலைநோக்குப் பார்வையை எட்டும் வகையில், புத்தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் செயல்பாடுகளை அரசு முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில், மதுரை தமுக்கம் மைதானத்தில் செப் 28, 29ம் தேதிகளில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைக்கும் 'தமிழ்நாடு ஸ்டார்ட்அப் திருவிழா 2024' நடைபெறவுள்ளது. இந்த இரண்டு நாள் மாபெரும் நிகழ்வில், தமிழ்நாட்டின் புத்தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும் அரசின் திட்டங்கள் குறித்தும், புத்தொழில் செயல்பாட்டாளர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
மாநாட்டில் புத்தொழில் சூழமைவைச் சார்ந்த ஆளுமைகள், துறைசார் வல்லுநர்கள், இந்தியாவிலுள்ள முன்னணி மாநில ஸ்டார்ட்அப் மையங்களின் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட 80க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்கின்றனர்.
இதையும் படிங்க : “செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் இடம் உண்டா?" அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் - Ma Subramanian on Senthil Balaji
இதில், ஊக்கமளிக்கும் முக்கிய உரைகள், கலந்துரையாடல்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் குழு விவாதங்கள் ஆகியவை இடம்பெறும். 150க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற உள்ளது. கண்காட்சியில் குறைந்தபட்சம் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு அனுமதி இலவசம். தமிழ்நாட்டில் இயங்கும் உணவுத் துறை சார்ந்த புதுமையான புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் சிறப்புக் கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியின் மற்றொரு சிறப்பம்சமாக வெப் 3 (மெட்டாவெர்ஸ்) எக்ஸ்பீரியன்ஸ் அரங்கம் உள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நேரடி விளக்கக் காட்சிகளை வழங்குவதோடு, கண்காட்சியில் பங்கேற்பாளர்களுக்கு தங்கள் புதுமையான தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்படும். தொடர்ந்து முதலீட்டாளர், புத்தொழில் நிறுவனங்கள் இணைப்பு நிகழ்வுகளும் நடைபெறும். திருவிழாவைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு: https:startuptn.infest இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த நிகழ்வில் விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் உட்பட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
நிறைவு விழாவில் புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மூலமாக மாநில அரசு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக செயல்படுத்தும் புதிய திட்டங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு திட்ட ஆணைகளை வழங்க உள்ளார்" என்று தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்