மதுரை: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த செல்வராஜ், சரவணன், மணிகண்டன், பஞ்சு ஆகியோர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், '' சிங்கம்புணரி பகுதியில் மர அறுவை தொழில் செய்து வருகின்றோம். மதுரையை தலைமையிடமாக கொண்டு நியோ மேக்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டது.
இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி மற்றும் முதலீடு செய்த தொகை இரண்டு வருடத்தில் இரட்டிப்பு செய்து தரப்படும் என எங்கள் பகுதியைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் தெரிவித்தார். அதன் அடிப்படையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நியோ மேக்ஸ் நிறுவனத்தில் 31 லட்சம் முதலீடு செய்தோம். இதன் கிளை நிறுவனங்களாக 42 நிறுவனங்கள் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு உரிய வட்டித்தொகை திரும்ப தராததால் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பல்லாவரத்தில் கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததாக இருவர் இறக்கவில்லை.. அமைச்சர் மறுப்பு..!
இந்நிலையில், முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்டோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விசாரணை செய்த உயர் நீதிமன்றம், பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களிடமிருந்து புகார்களை பெற்று தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழிகாட்டுதல்களை பிறப்பித்து உள்ளது.
எனவே, எங்களுடைய புகார் மனுவையும் பெற்று எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஜஸ்வந்த் ஆஜராகி, '' மனுதாரர்கள் நிதி நிறுவனத்தை நம்பி 31 லட்சம் முதலீடு செய்திருந்தனர். ஆனால், முறைகேடு குறித்து பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அப்போது நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வசம் எவ்வளவு புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.
மேலும், மனுதாரர் புகார் குறித்து ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதி, இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.