மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த குமரன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார், இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு மிகவும் பாடுபட்டவர். இந்தியாவின் கப்பலோட்டிய தமிழன் என்ற பெருமையும் வ.உ.சிதம்பரனாரையே சேரும்.
வ.உ.சிதம்பரனார் விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டதால், பலமுறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட போது, வ.உ.சிதம்பரனாருக்கு செக்கு இழுக்கும் தண்டனை கொடுக்கப்பட்டது. அந்த செக்கு, தற்போது வரை கோயம்புத்தூர் மத்திய சிறையில் சிதம்பரனாரின் நினைவாக வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையி,ல் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கினை பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அனைவரும் காணும் வகையிலும், அவருடைய தியாகத்தை தெரிந்து கொள்ளும் வகையில், வ.உ.சி வாழ்ந்து வந்த நினைவு இல்லம் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடராத்திற்கு மாற்ற வேண்டும்.
இது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவை மத்திய சிறையில் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக உள்ள செக்கினை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அவர் வாழ்ந்த இல்லத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவர் இழுத்த செக்கு நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதனை அவர் வாழ்ந்த இல்லத்திற்கு மாற்றுவது அரசின் கொள்கை முடிவு” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து மனுதாரர் தரப்பில், “அவர் பெருமையை வெளிக்காட்டும் வகையில், அவர் சிறையில்பட்ட துன்பம் மற்றும் தியாகத்தை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள, செக்கை அவர் வாழ்ந்த இல்லத்தில் வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், மனு குறித்து தமிழ்நாடு அரசிடம் உரிய விளக்கம் பெற்றுத் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரிய தம்பதியின் மனு தள்ளுபடி