மதுரை: மதுரையை தலைமையாகக் கொண்டு 'நியோ மேக்ஸ்' பிராபர்ட்டீஸ் (பி) லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனர்களாக கபில், கமலக்கண்ணன் என பலர் உள்ளனர். இந்த நிறுவனத்துக்கு மதுரை, திண்டுக்கல், பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை என பல மாவட்டத்தில் அலுவலகங்கள் செயல்பட்டன.
இங்கு நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும். இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் இரட்டிப்பாக தரப்படும் என ஆசை வார்த்தை கூறி 5 ஆயிரம் கோடி முதலீடுகளை வசூலித்துள்ளனர். இதை நம்பி பலர் முதலீடுகளை செய்துள்ளனர்.
ஆனால், கூறியபடி யாருக்கும் வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதனால் பலர் மதுரை, திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு அளித்தனர். இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கமலக்கண்ணன், பாலசுப்ரமணியன், கபில், வீரசக்தி ஆகியோர் கைதாகி சிறை சென்று தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர். இதில் கபில் உள்ளிட்ட பலரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தண்டபாணி பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது; 'நிதி நிறுவனங்கள் ஆசை வார்த்தைகளை நம்பி அதன் மூலம் வைப்புத்தொகை வைத்து 3.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 11,179 பேர் மட்டுமே தங்களது முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர். இதில் பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளது. 850 கோடி ரூபாய் சொத்துக்கள் இதுவரையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து இதுபோன்று நிதி நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வழக்கைப் பொறுத்தவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டு முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார்கள். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் பெற்று நிவாரணம் வழங்க வழக்கறிஞர் ஆணையம் அமைத்து உத்தரவு பிறப்பித்து இருந்தது, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
மேலும், இந்த முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தங்களிடம் முதலீடு செய்தவர்களின் விவரங்கள், முதலீடு செய்யப்பட்ட தொகை, நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்கள், சொத்துக்கள் விவரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.
பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை முழுவதுமாக கண்டறியும் விதமாக மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கும் விதமாக தமிழக அளவில் செய்தித்தாளில் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் கொடுக்கப்பட்டதில் இருந்து 8 வாரங்களுக்குள்ளாக பாதிக்கப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் பொருளாதார குற்றப்பிரிவை அணுகி புகார் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களும் புகார் பெற்று பொருளாதார குற்றப்பிரிவு இந்த வழக்கு தொடர்பான விசாரணையை முடித்து 15 மாதங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும். நிதி நிறுவனம் நடத்திய மோசடி செய்தவர்களின் சொத்துக்கள், நிறுவனங்களின் சொத்து குறித்து கண்டறிந்து, அவற்றை மொத்தமாக வழக்கில் இணைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவற்றின் மீது நிரந்தர உரிமை கோருவது தொடர்பான மனுவை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அதன் அடிப்படையில் உரிமம் பெற்று விதிகளின்படி அவற்றை விற்பனைக்கு அல்லது ஏலத்திற்கு விட்டு, அந்த தொகையை வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று முதலீடு செய்தவர்களுக்கு வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: 'நரம்பு பகுதிக்கு குறி'.. கொலைக்கு 45 நிமிடங்கள் முன்பு ஸ்கெட்ச்.. ஆம்ஸ்ட்ராங் வீழ்த்தப்பட்டது எப்படி?