மதுரை: கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவ நுழைவுத் தேர்வில், முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்த சென்னையைச் சேர்ந்த தருண் மோகன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வில் மாணவன் ஒருவனுக்கு ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுத தரகராக செயல்பட்டதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் ஆல்மாறாட்டம் செய்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக எழுந்த புகார் அடிப்படையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த சென்னை மாணவர் உதித் சூர்யா என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது பல அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது.
அதில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் பலர் உத்தரப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், கல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய சம்பவம் வெளியானது. இந்தச் சம்பவம் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கை தமிழ்நாடு அரசு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய தேர்வு முகமை சார்பில் மத்திய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி, சிபிசிஐடி போலீசார் கேட்ட OMR சீட் விவரங்களை 2023ஆம் ஆண்டு கொடுத்துள்ளோம் என்றார்.
மேலும், இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை செய்தி ஊடகங்கள் கண்டபடி போடுகிறார்கள் எனத் தெரிவித்து செய்தித்தாள்களில் செய்தி வந்ததை எடுத்துக் காண்பித்தார்.
அப்போது நீதிபதி புகழேந்தி, “செய்தி ஊடகங்கள் சரியாகத்தான் செய்திகளை வெளியிட்டுள்ளது. அதில் என்ன தவறு உள்ளது, தமிழகத்தில் மாணவிகள் அணிந்து வரக்கூடிய அணிகலன்களையும், கழட்டி ஆராய்ந்து ஆய்வு செய்யும் நீங்கள் இந்தியாவில் இல்லாத ஒரு மாணவருக்கு மூன்று மாநிலங்களில் தேர்வு எழுதியதை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் எந்த முகவரியில் தேர்வு எழுதினார் என்ற ஆவணங்களை ஏன் இன்னும் கொடுக்கவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுகுறித்து நீதிபதி, “மாணவிகள் அணிகலன்களில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வருகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், அந்த நவீன தொழில்நுட்பங்களை வைத்து ஏன் போலியாக தேர்வு எழுதிய ஆதார் கார்டு விவரங்களை உங்களால் சேகரிக்க முடியவில்லை” எனக் கேட்டார்.
பின் நீதிபதி மத்திய அரசின் வழக்கறிஞரிடம், “சிபிசிஐடி இந்த வழக்கு குறித்து கேட்டிருந்த ஆவணங்களை தேசிய தேர்வு முகமையிடம் கேட்டு விண்ணப்பித்தீர்கள். அதற்கான ஆவணங்கள் எங்கே என்று கேள்வி எழுப்பினார். மேலும், சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை முறையாக கையாளவில்லை, ஐந்து வருடங்களாக விசாரணை சரிவர நடத்தவில்லை என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
உரிய ஆவணங்களைக் கேட்டு நீட் தேர்வு முகமை தரவில்லை என்றால், அதனை தரக்கோரி எழுத்து மூலமாக விண்ணப்பித்திருக்கலாம். இல்லை என்றால் நீதிமன்றத்தின் உதவியை நாடி இருக்கலாம். எதுவுமே செய்யாமல் குற்றவாளிகளுக்கு காலத்தை வீணடித்து வழக்கை நகரச் செய்யாமல் செய்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இந்த வழக்கை நேர்மையாக விசாரணை செய்யக்கூடிய சிபிசிஐடி அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமியுங்கள் என நீதிபதி அறிவுறுத்தினர்.
மேலும், இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை வரும் 19ஆம் தேதிக்குள் சிபிசிஐடி கேட்கும் அனைத்து ஆவணங்களையும் வழங்க வேண்டும். அதேபோல, சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கில் என்ன முன்னேற்றம் உள்ளது என இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தேனி சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!