மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளத்தைச் சேர்ந்த பிரகலாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் முருக மலை அடிவாரத்தில் 12.30 ஏக்கர் பரப்பளவில் முருக மலை ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் உள்ள தண்ணீரை, தங்கள் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் விவசாயத்திற்கும், வன விலங்குகள் குடிப்பதற்குமான நீர் ஆதாரமாக உள்ளது.
இந்த ஊரணியை கவிதா என்பவர் ஆக்கிரமித்து ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளார். அதற்கு மின் இணைப்பு வழங்கவும் மனு செய்து உள்ளார். கண்மாய், ஏரி, ஓடை ஊரணி உள்ளிட்ட நீர்நிலைகளில் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே உத்தரவுகள் வழங்கி உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நீர் நிலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடுவதுடன், சட்ட விரோதமாக நீர் நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றிற்கு மின் இணைப்பு வழங்க இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார், அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: கோவையில் ஒரு லட்சம் வாக்குகள் மிஸ்ஸிங் விவகாரம்.. கோவை மூத்த வழக்கறிஞர் கருத்து! - Lok Sabha Election 2024