மதுரை: விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மதுரை அமர்வில் 2018ஆம் ஆண்டில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் கதர் வாரியத்தின் மூலம் பல்வேறு துணி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு கைத்தறி பொருட்கள் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளின் பொருட்கள் மூலம் எண்ணற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உள்ளது.
இந்த நிலையில் பல்வேறு இடங்களில் உள்ள 92 கடைகளில் 41 கடைகளை மூடும் வகையில் கதர் வாரிய அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் மூலம் அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கதர் வாரிய 41 கடைகளை பிற கடைகளுடன் இணைக்கும் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று (செப்.6) பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், "காதி வாரிய கடைகளில் எங்கெங்கெல்லாம் லாபகரமாக இயங்குகின்றன. நஷ்டத்தில் இயங்கும் கடைகள் எத்தனை என்பது குறித்து கதர் வாரியம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், கதர் வாரிய கடைகளின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் நிபுணர் குழுவை அமைத்து ஆய்வு நடத்துவது சம்பந்தமாகவும் பதிலளிக்க வேண்டும்" என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்