மதுரை: நெல்லையைச் சேர்ந்த சந்திரா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், தனது மகன் முத்துக்குமாரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி கார்த்திகேயன், சத்திய நாராயண பிரசாத் அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார் ஆஜராகி, “மனுதாரர் மகன் தனது மனைவி பராமரிப்பில் உள்ளார். கணவனை கவனித்துக் கொண்டு, உரிய சிகிச்சை அளிக்கும் உரிமை மனைவிக்கு உள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “மனுதாரரின் மகன் முத்துக்குமார், அபி சோபியா என்பவரை திருமணம் செய்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி முத்துக்குமார் விபத்து ஒன்றில் சிக்கிய நிலையில் தலையில் அடிபட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் முத்துக்குமாரின் மனைவி அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர் என்பதால் அவர் முத்துக்குமாரை சிகிச்சை அளித்து கவனித்து வருகிறார்.
இந்நிலையில், மனுதாரர் தனது மகனுக்கு சித்த மருத்துவத்தால் குணமளிக்க இயலாது. ஆங்கில மருத்துவம் தான் சரியாக இருக்கும் என குறிப்பிடுகின்றார். மனுதாரரின் மகன் சட்ட விரோதமாக கடத்தப்படவில்லை. கணவனை கவனித்துக் கொண்டு, உரிய சிகிச்சை அளிக்கும் உரிமை மனைவிக்கு உள்ளது. கணவனை மனைவி பராமரிப்பில் வைத்திருப்பது சட்டவிரோதமாகது.
சட்ட விரோதமாக கடத்தியோ, காவலிலோ வைக்கப்படும் வழக்குகளில் தான் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க நேரிடும். அதுபோன்ற சம்பவம் எதுவும் இதில் நடைபெறவில்லை. ஆகவே, மனுதாரர் நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தை அணுகி தனது மகனுக்கு முறையான மருத்துவ வசதிகள் தரப்படுகிறதா? என்பதை உறுதிப்படுத்த கோரிக்கை விடுக்கலாம்.
முத்துக்குமாரின் மனைவி அபிஷாவும் மனுதாரருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த வேண்டும். நெல்லை சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவரும் விதிகளை கருத்தில் கொண்டு இந்த விஷயத்தை அணுக வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க: "தமிழகத்தின் பிரச்னைகள் களையப்பட அதிமுக ஆட்சி அமைய வேண்டும்" - கே.டி.ராஜேந்திர பாலாஜி