தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தவிலை கிராமத்தில் அருள் தரும் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (ஜூலை 10) நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம் தலைமை வகித்து விழாவினை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வின் போது செய்தியாளர்களைச் சந்தித்த மதுரை ஆதீனம் கூறுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இன்றுடன் 66 பேர் உயிரிழந்தனர் (இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர்). இது ஒரு வருந்தத்தக்க விஷயம். மாணவர்கள் பாஸ் மார்க்கை நோக்கி பயணிக்கிறார்களோ இல்லையோ, டாஸ்மாக்கை நோக்கி பயணிக்கின்றனர். இதற்கு ஒரே வழி டாஸ்மாக்கை அடைக்க வேண்டும்.
ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்கள். நீட் தேர்வில் கூட நிறைய மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று கனகசபை நிகழ்வில் அனைத்து மக்களும் தரிசனம் செய்ய அனுமதி அளித்தது மகிழ்ச்சி. பகுஜன் சமாஜ் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒரு கொடுமையான செயல், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்பதை நான் ஆதரிக்கிறேன்” என்றார்.
அதனைத் தொடர்ந்து, மக்கள் மீது திமுக அரசு கவனம் செலுத்தாமல் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், "மக்கள் தானே திமுகவை ஆதரிக்கிறார்கள். மக்கள் திமுகவுக்கு தான் ஓட்டு போடப் போகிறார்கள். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக தான் ஜெயிக்கப் போகிறது" என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் எம்எல்ஏ கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து; ஆம்பூர் அருகே பரபரப்பு! - gudiyatham ex mla car accident