சென்னை: அதிமுக பெயர், கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை கோரி எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், வழக்கில் பதிலளிக்க ஓபிஎஸ் தாமதப்படுத்துவதை சுட்டிக்காட்டி, அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
அதேநேரத்தில், இடைக்கால தடைக்காலம் முடிந்த நிலையில், அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டாம் எனவும், வழக்கில் தீர்ப்பளிக்கும் வரை அவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓபிஎஸ் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை மார்ச் 12ம் தேதி ஒத்திவைத்தார். வழக்கு விசாரணை மார்ச் 12 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று (திங்கட்கிழமை) நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். அதில், "அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை" விதித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவின் முழு விவரம்:
"ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான எடப்பாடி பழனிசாமி வழக்கில், அதிமுக-வின் கட்சி விதிகளில், கொடி குறித்து விவரிக்கப்பட்டுள்ளதால், அந்த கொடியை பயன்படுத்தக் கூடாது என பழனிசாமி குறிப்பிடவில்லை என்கிற ஓ.பன்னீர்செல்வத்தின் வாதத்தை ஏற்கமுடியாது.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்த வழக்குகளில், எந்த நீதிமன்றமும் நீக்கம் செல்லுபடியாகாது என சொல்லாத நிலையில், கட்சியில் தொடர்வதாக கூறி அதிமுக-வின் கொடி, பெயர் சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த முடியாது. ஓ. பன்னீர்செல்வத்தின் நீக்கம் செல்லாது என ஏதாவது ஒரு நீதிமன்றம் அறிவிக்கும் வரை, அதிமுக பொதுச் செயலாளரின் பணிகளில் அவர் தலையிட முடியாது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்த பிரதான உரிமையியல் வழக்கு நிலுவையில் உள்ளததால், கட்சியில் நீடிப்பது, ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்ள முடியாது. அவரது ஆதரவாளர்கள் புதிதாக கட்சியை தொடங்கினால், அந்த புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று கூறிக்கொள்வதில் பிரச்சனை இல்லை. ஆனால், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் என கூறக்கொள்ள முடியாது.
அதிமுக-வின் பெரும்பான்மையான உறுப்பினர்களால், பொதுச் செயலாளர் என்று தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பணிகளில் தலையிடவோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த அனுமதித்தால் அரசியல் அரங்கிலும், தொண்டர்கள் மத்தியிலும் தீவிரமான குழப்பத்தை ஏற்படுத்தும்.
எனவே, அதிமுக பொதுச் செயலாளராக பணியாற்றும் நடவடிக்கைகளில் தலையிடுவது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று கூறிக்கொள்வது, கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பயன்படுத்தவது போன்ற ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக பிரமுகர் கொலை வழக்கு; கூலிப்படை ஏவி கொலை செய்த பெண் ஊராட்சி மன்ற தலைவி கைது