சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள், தனியார் பேருந்தில் பயணித்து கல்லூரிக்கு சென்று வருகின்றனர். அதுபோல நேற்று (மார்ச் 12) படிக்கட்டில் தொங்கியவாறு 10 மாணவர்கள் பயணித்த நிலையில், முந்தி சென்ற வாகனதுக்கு வழிவிடுவதற்காக பேருந்தை இடதுபக்கம் திருப்பிய நிலையில், அங்கு நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து உரசியதாக கூறப்படுகிறது.
அப்போது படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களில் மோனிஷ், கமலேஷ், தனுஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், ஐந்து மாணவர்கள் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து வெளியான செய்திகளை முன்வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வழக்கறிஞர் ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ் முறையீடு செய்தார். அப்போது உயர் நீதிமன்றமே தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை, பொது நல வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் எனவும், அனைத்து பேருந்துகளிலும் படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில் வழிக்காட்டு நெறிமுறைகளை உருவாக்க அரசுக்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுப்பு குறித்து, பொதுநல வழக்கு குழுவுக்கு பரிந்துரைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தலைமறைவான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்? சிபிசிஐடி 'லுக் அவுட் நோட்டீஸ்'