சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லுரிகளில் காலியாக உள்ள இணைப் போரசிரியர் பணிக்கு நேரடி நியமனங்கள் மேற்கொள்ளக் கோரி வசந்தகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.
சட்டக்கல்வி இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "தமிழகத்தில் உள்ள 15 அரசு சட்டக் கல்லூரிகளில், அனுமதிக்கப்பட்ட 20 இணை பேராசிரியர் பணியிடங்களில் 19 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், மொத்தமுள்ள 206 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில், 70 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு சட்டக் கல்லூரிகளில் அதிக காலியிடங்கள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது என அதிருப்தி தெரிவித்த உயர் நீதிமன்றம், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க முடியாவிட்டால், சட்டக் கல்லூரிகளை மூடி விடுவது நல்லது என காட்டமாக தெரிவித்ததோடு, தமிழக அரசின் சட்டத்துறை செயலாளரை நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்தா அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் நேரில் ஆஜராகி இருந்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவது தொடர்பாக தேர்வு நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும், ஆசிரியர் தேர்வு வாரியம் சில விளக்கங்களை கோரியுள்ளதால், அதற்கு நாளைக்குள் பதில் அளிக்கப்படும் என்றும், அதன் பிறகு தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து காலியிடங்களை நிரப்பாமல் தரமான சட்டக் கல்வியை எப்படி வழங்க முடியும்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசின் விளக்கத்தை பதிவு செய்து கொண்டு, அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து தெரிவிக்கும் வகையில், வழக்கின் விசாரணையை அக்டோபர் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.