சென்னை: சென்னை காரப்பாக்கம் பகுதியில் சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றிய வருவாய்த்துறை உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த நிலத்தை மீட்டு பராமரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
சென்னை காரப்பாக்கத்தில் பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய 38 ஏக்கர் நிலப்பகுதியை, சதுப்பு நிலம் என வகைப்படுத்திய வருவாய்த்துறை, அதில் 8 ஏக்கர் அளவிற்கு தரமணியில் செயல்பட்டு வரும் இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்றம் செய்து, கடந்த 2014ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து, சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ஐ.ஹெச்.சேகர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், பக்கிங்காம் கல்வாயில் இருந்து வரும் உபரி நீர், துரைப்பாக்கம் - ஒக்கியம் கால்வாய் வழியாக வரும் தண்ணீரை சேகரிக்கப் பயன்படும் சதுப்பு நிலப் பகுதியை பாதுகாக்க வேண்டிய அரசே, அந்நிலத்தை புள்ளியியல் நிறுவனத்திற்கு வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, சதுப்பு நிலத்தை இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு ஒதுக்கிய உத்தரவை ரத்து செய்தனர். மேலும், இந்திய புள்ளியியல் நிறுவனத்திற்கு மாற்று இடம் ஒதுக்கும்படியும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அந்த நிலத்தை மீட்டு, பராமரிக்க வேண்டும் எனவும், சதுப்பு நிலத்தில் எந்த விதமான ஆக்கிரமிப்புகளையும், கட்டுமானங்களையும் அனுமதிக்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.