சென்னை: ஃப்ரெட் ரோஜர்ஸ் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 22 ஆயிரத்து 364 திருநர்கள் உள்ள நிலையில், இவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் வழங்கப்படாமல் அடிப்படை உரிமை மறுக்கப்படுவதால், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ஒருவர் செல்லும் வகையில் பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் பொது இடங்களில் ஏற்கனவே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடங்களை பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது.
இதையும் படிங்க: அரக்கோணம் கடற்படை விமானத் தளத்தில் ஹெலிகாப்டர் விமானி பயிற்சி நிறைவு! - Helicopter Pilot Training