சென்னை: திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன் என்பவர், சென்ன உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், "பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணம், தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய், திமுகவின் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் அலுவலகத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் ஆகியோரை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனு மீது தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை.
இருவரையும் தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இருவருக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "பாஜக வேட்பாளரின் உதவியாளர்களிடம் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும், திமுக மாவட்டச் செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புலன் விசாரணை நடந்து வருகிறது. பெருந்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பணம் பறிமுதல் தொடர்பாக மனுதாரர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: தமிழகத்தில் காவல் நிலைய மரணங்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் பொருந்தாதா? - ஹென்றி திபேன் சரமாரி கேள்வி