சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண, நியாயமான கட்டணத்தில் டிக்கெட் பெறுவது சிரமமாக உள்ளது. மேலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஆன்லைன் மூலம் டிக்கெட்களை விற்கிறது. ஆனால், விற்பனை துவங்கிய சிறிது நேரத்திலேயே டிக்கெட்கள் விற்று தீர்ந்து விடுகின்றன. சில சமூக விரோதிகள், டிக்கெட்களை மொத்தமாக வாங்கி, அதனை 10 மடங்கு அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
குறைந்த கட்டண டிக்கெட்டுகள் கூட, 14 ஆயிரம் முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகின்றன. டிக்கெட்டுகளை வாங்கி அதிக விலைக்கு விற்பதன் பின்னணியில், மாஃபியா கும்பல் இயங்கி வருகிறது. சமீபத்தில், ஐபிஎல் டிக்கெட்களை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து எட்டு டிக்கெட்களும், 31 ஆயிரத்து 500 ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த மாஃபியா கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விதிகளை மீறி செயல்படும் சேப்பாக்கம் மைதான அதிகாரிகளுக்கும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்வது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, விளையாட்டு போட்டிகள் முடியும் நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்கும் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விடுப்பு மறுப்பு: நீதிமன்றத்திற்குள் உதவியாளர் தற்கொலை முயற்சி..கரூரில் நடந்தது என்ன?