சென்னை: மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பகவத் சிங் என்பவர் தாக்கல் செய்திருந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வலியுறுத்தி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது மெரினாவில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே டிசம்பர் 20ஆம் தேதி முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவை ரத்து செய்து, உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க உத்தரவிடும்படி கோரிக்கை வைத்திருந்தார்.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது எனவும், மனுதாரர் கேட்கும் இடங்களில் அனுமதிக்க முடியாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேநேரம், வேறு எந்த மாதிரியான போராட்டத்திற்கு எந்த இடத்தில் அனுமதிக்கப்படும் என காவல்துறை விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுத்ததாகவும், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிப்ரவரி 27ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே கலந்துகொள்ள இருப்பதாகக் கூறி, சட்டம் ஒழுங்கு பிரச்னை எதுவும் ஏற்படாது என உறுதியளிக்கப்பட்டது.
பின்னர், மனுதாரர் கேட்பதில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்பதால், வழக்கமான நிபந்தனைகளுடன் உண்ணாவிரத போராட்டத்திற்கு பிப்ரவரி 28 முதல் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 6ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: பிப்.12-இல் ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு!