சென்னை: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஃபெலிக்ஸ் ராஜ் என்பவர் தமிழக அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்திருந்தார். இந்தத் திட்டத்தின் கீழ் அவரது ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகையை காப்பீட்டு நிறுவனத்திற்கு அரசு செலுத்தி வந்தது.
இந்நிலையில், சாலை விபத்தில் காயமடைந்த தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு செலவான 6 லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாயை வழங்கக் கோரி ஃபெலிக்ஸ் ராஜ் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்த அரசு, காப்பீட்டு திட்ட விதிகளின்படி திருமணமான அரசு ஊழியரின் பெற்றோர், குடும்ப உறுப்பினர் என்ற வரம்புக்குள் வரமாட்டார்கள் எனக் கூறி அந்த விண்ணப்பத்தை நிராகரித்தது.
இதை எதிர்த்தும், திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினர்களாகச் சேர்க்காமல் விலக்கி வைக்கும் பிரிவை எதிர்த்தும் ஃபெலிக்ஸ் ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுதீர் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, திருமணமானாலும் அரசு ஊழியரின் பெற்றோர் அவரின் பெற்றோராகவே நீடிப்பதால் காப்பீட்டுத் திட்ட பலன்களை மறுக்க முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது என சுட்டிக்காட்டி, ஃபெலிக்ஸ் ராஜின் விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து 8 வாரங்களில் மருத்துவச் செலவை திருப்பி வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரை குடும்ப உறுப்பினர்களாக சேர்க்காமல் விலக்கி வைத்தது சட்டவிரோதமானது என தெரிவித்த நீதிபதி, காப்பீட்டு திட்ட பலன்களை திருமணமான அரசு ஊழியரின் பெற்றோரும் பெறும் வகையில், அவர்களை அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த உத்தரவின் நகலை தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கும்படி, பதிவுத்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க: அரசு காப்பீடு வாங்கித் தருவதாகக் கூறி மூதாட்டியிடம் செயின் பறிப்பு - சென்னையில் நடந்தது என்ன?