சென்னை: நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தேசிய, மாநில, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்கள் தலைவர் மற்றும் நீதித்துறை உறுப்பினர், நிபுணத்துவ உறுப்பினர்களுடன் செயல்பட வேண்டும். ஆனால், தற்காலிக தேவைகளுக்காக ஒற்றை உறுப்பினருடன் செயல்பட நுகர்வோர் சட்டப்பிரிவு வழிவகை செய்கிறது.
தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தலைவராக நீதித்துறை உறுப்பினராக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சுப்பையா பதவி வகிக்கிறார். இவ்வாறு இவர் கடந்த ஓராண்டாக ஒரு உறுப்பினருடன் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம் செயல்படுவது சட்டவிரோதமானது என்பதால், ஒரு உறுப்பினருடன் ஆணையம் செயல்பட அனுமதிக்கும் சட்டப்பிரிவை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரி, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த விமல்மேனன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒற்றை உறுப்பினராக வழக்குகளை விசாரிக்கவும், முடிவுகளை எடுக்கவும் தடை விதிக்க வேண்டும் எனவும், ஒற்றை உறுப்பினர் அமர்வு பிறப்பித்த உத்தரவுகளைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இந்த நிலையில், இந்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய, மாநில அரசுகள், மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி அமர்வு தள்ளிவைத்தது.
இதையும் படிங்க: ஆன்லைன் ஆர்டரில் ஊத்தாப்பம், தோசை மிஸ்சிங்; வாடிக்கையாளுக்கு 15 ஆயிரம் நஷ்டஈடு தர சோமாட்டோ நிறுவனத்திற்கு உத்தரவு!