சென்னை: நடிகர் கவுண்டமணி, கடந்த 1996ஆம் ஆண்டு நளினி பாய் என்பவருக்குச் சொந்தமான கோடம்பாக்கம் - ஆற்காடு சாலையில் உள்ள நிலத்தை வாங்கி, அதை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து, 22,700 சதுர அடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்.
கட்டுமான பணிகளுக்காகவும், ஒப்பந்ததாரர் கட்டணமாக 3 கோடியே 58 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டு, கடந்த 1996ஆம் ஆண்டு முதல் 1999ஆம் ஆண்டு வரை 1 கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில், கடந்த 2003ஆம் ஆண்டு வரை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். சம்பந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர், 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையைச் சுட்டிக்காட்டி, கட்டுமானப் பணிகளை முழுமையாக முடித்துவிட்டு பணம் தராவிட்டால்தான் அதைக் கேட்க முடியும் என்றும், முடித்த பணிகளுடன் ஒப்பிடும்போது 63 லட்சம் ரூபாய் அதிகமாகவே நடிகர் கவுண்டமணியிடம் கட்டுமானம் நிறுவனம் பெற்றுள்ளதாகக் கூறி, நடிகர் கவுண்டமணி இடமிருந்து பெற்ற ஐந்து கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு தனி நீதிபதி பிறப்பித்த இந்த தீர்ப்பை எதிர்த்து, தனியார் கட்டுமான நிறுவனம் கடந்த 2021ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவைத் தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்துள்ளது.
இதையும் படிங்க: கோயில் அருகே உள்ள இறைச்சி கடையை அகற்ற கோரிய வழக்கு; மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!