சென்னை: கடலூர் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பண்ருட்டியை அடுத்த மேல்மாம்பட்டையைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராசு, கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கின் விசாரணை கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கில் விசாரணை முறையாக நடைபெறவில்லை, சாட்சிகள் மிரட்டப்படுவதாக கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
மேலும், வழக்கை ஆறு மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்வதற்காக, வழக்கு விசாரணை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக வந்தது. அப்போது செந்தில்வேல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சசிகுமார், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், கடந்த ஆறு மாதத்தில் ஒரு சாட்சியைக் கூட செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் விசாரிக்கவில்லை.
எனவே, வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்தார். காவல்துறை தரப்பில் வழக்கின் விசாரணை முடிக்க மேலும் கால அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, மேலும் 6 மாத காலம் கூடுதல் அவகாசம் வழங்குவதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சிவில் நீதிபதி தேர்ச்சி பட்டியல் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! என்ன காரணம்?