சென்னை: மாயூரபுரம் குரு பாம்பன் ஸ்ரீமத் குமரகுரு தாஸ அன்னாதானம் சபையின் தலைவர் டி.சரவணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தங்கள் சபை 1999-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில் அன்னதானம் செய்து, பாம்பன் சுவாமிகளின் சிந்தனை, நம்பிக்கையை வளர்த்து வருவதாகவும், பாம்பன் சுவாமிக்கு 1929-ம் ஆண்டு முதல் 1971 வரை குப்புசாமி செட்டியார் தலைமையிலான சபை பூஜைகளை செய்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த கோயிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்ளப்பட்டதை எதிர்த்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதனால் இந்த கோயிலில் பூஜை செய்ய மேலும் பல சபைகள் உள்ளதாகவும், இந்நிலையில், பாம்பன் சுவாமிகளின் சமாதியை வளைத்து கோயில் போல உருவாக்கி, ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம் செய்ய அறநிலையத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பல்வேறு தீர்ப்புகளை மீறியுள்ளனர். எனவே, ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும்என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கும்பாபிஷேகம் நடத்த எந்த தடையும் இல்லை. திட்டமிட்டப்படி ஜூலை 12-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தலாம். மனுதாரர் தன் கோரிக்கை குறித்து அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து, வருகிற 24-ம் தேதி நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறலாம். இந்த கும்பாபிஷேகத்தின் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ராமநாதபுரம் ராமநாத சுவாமி கோயில் வழக்கு; ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!