சென்னை: தனியார் வங்கியின் துணை நிறுவனத்தில் பணியாற்றிய கஸ்தூரி பிரியா என்பவர், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், உடல் நிலை மேலும் மோசமடைந்து இயல்பு வாழ்க்கை வாழ முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் தனக்கு அளித்த சிகிச்சை குறித்து நிபுணர் குழுவை நியமித்து விசாரிக்க கோரியும், 1 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியும் கஸ்தூரி பிரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தவறான சிகிச்சை வழங்கியதுடன், தனக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்த ஆவணங்களை இ.எஸ்.ஐ தரவில்லை என்றும், இதன் காரணமாக பெருத்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இ.எஸ்.ஐ கழகம், கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், இந்திய மருத்துவ ஆணையம் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி தனியார் மீன் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு: 30க்கு மேற்பட்ட பெண்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கம்!