சென்னை: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு ஆணவக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி வழங்கக் கோரி, அவரது மனைவி சுவிதா, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜராகி, தங்களது மனுவை முறையாக பரிசீலிக்காமல் ஆட்சியர் பரிந்துரைப்படி சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக கூறினார். சிறைத்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும் படி, சிறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: நிர்மலா தேவி விவகாரம்: "பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்காமல் விசாரணை நடத்த முடியாது" - சென்னை உயர் நீதிமன்றம்..! - Professor Nirmala Devi Case