சென்னை: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைச் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர், சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் அமுதா மீது ஆள்மாறாட்டம் செய்து 20 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக ரோஸ்லின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என்பதால், விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென ரோஸ்லின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (மார்ச் 6) விசாரணைக்கு வந்தது. அப்போது ரோஸ்லின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிபிசிஐடி போலிசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனவும், குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவரிடம் கூட இதுவரை சிபிசிஐடி விசாரணை நடத்தவில்லை எனவும் கூறினார்.
மேலும், உடல் நிலை சரியல்லை என பொய்யான காரணங்களைக் கூறி அமுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். உடல் நிலை நன்றாக உள்ள நிலையில், வேண்டுமென்றே சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வருவதாக அவர் தெரிவித்தார்.
சிபிசிஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக சரணடைந்த அமுதா மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனையடுத்து, அவர் சரணடைந்தது முதல் தற்போது வரை சிறையில் இருக்கிறாரா அல்லது மருத்துவமனையில் இருக்கிறாரா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.