சென்னை: தமிழ்நாடு வனப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கும், விலங்குகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வனத்துறை சார்பில், நீலகிரி மாவட்டத்தில் வசூலிக்கப்பட்ட பசுமை வரி ரூ.5 கோடியே 31 லட்சத்து 98 ஆயிரத்து 549 மாவட்ட ஆட்சியர் பெயரில் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள வனப்பகுதியில் அந்நிய மரங்களை அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அந்நிய மரங்களை அகற்றக் கோரி 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு 10 ஆண்டுகளாக எந்த முடிவுக்கும் வராமல் உள்ளது. நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து ஓய்ந்து விட்டது. மேலும், வனத்துறை அதிகாரிகள், அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பாக சினிமா படக்காட்சிகளைப் போல விவரிப்பார்கள். ஆனால், எந்த பணியும் நடக்காது. ஒன்று ஓய்வு பெற்று விடுவார்கள் அல்லது இடமாறுதல் பெற்றுச் சென்று விடுவார்கள் என்பதால் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
வனத்துறையில் உள்ள அந்நிய மரங்களை அகற்றும் பணியில் டிஎன்பிஎல் காகித ஆலை ஈடுபட்டு வருகிறது. இதற்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசும் அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நிறுவனம் மூலம் 29 ஆயிரத்து 766 டன் அந்நிய மரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோல, சேஷசாயி பேப்பர் லிமிடெட் நிறுவனத்துக்கும் அந்நிய மரங்களை அகற்ற அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
அந்நிய மரங்களால் வனவிலங்குகள் ஊருக்குள் வருவதால் மனித உயிர் பலியாகுகிறது. இந்த மரங்கள் அதிவேகமாக வளர்வதால் வனப்பகுதியில் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுகிறது. அந்நிய மரங்களை மழைக் காலத்தில் அகற்ற முடியாது. அதனால், அரசு கடமை உணர்ந்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு வனத்துறை கோட்டத்திலும் மாதத்துக்கு 50 ஹெக்டேர் நிலத்தில் இருந்து அந்நிய மரங்களை அகற்ற வேண்டும்.
50 ஹெக்டர் நிலத்தில் அந்நிய மரங்களை அகற்ற 25 லட்சம் செலவாகும் என்று வனத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே, அந்நிய மரங்களை அகற்றும் பணியை மேற்கொண்டது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: நீலகிரியில் 2 புலிகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற கொடூரம்..வடமாநிலத்தை சேர்ந்த மூவர் கைது!