சென்னை: கடலூர் மாவட்டத்தில் 7, 8ஆம் வகுப்பு படித்து வந்த இரு மாணவிகளை கடந்த 2014ஆம் ஆண்டு கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கலா, பாத்திமா, கிரிஜா, மகாலட்சுமி, சர்மிளா பேகம், அன்பழகன், தனலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராகவும், சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிரியார் அருள்தாஸ், டிவி மெக்கானிக் செல்வராஜ் உள்ளிட்டோருக்கு எதிராகவும் கடலூர் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த கடலூர் மகளிர் சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட கலா உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலும் 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, கலா உட்பட 15 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது காவல்துறை விசாரணையில் குறைபாடுகள் உள்ளதாக சுட்டிக்காட்டி கலா, தனலட்சுமி மற்றும் அன்பழகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்து தீர்ப்பளித்தது.
அதேநேரம், பாத்திமா ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலத்தில் குறைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் பாதிரியார் அருள்தாஸ் உட்பட 11 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்த நீதிபதிகள், அவர்களை விடுதலை செய்யவும் உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளுக்கும் ஏற்கனவே இழப்பீடு வழங்கியிருந்தாலும், கூடுதலாக தலா ரூ.3 லட்சம் இழப்பீடு தொகையாக வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: மாதம் ரூ.1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம்; பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தல்! - Tamil puthalvan scheme