சென்னை: விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் இல்லாமல் மாடுகளை, அண்டை மாநிலங்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சோதனை நடத்த தமிழக அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய விலங்குகள் நல வாரியம் தரப்பில் எவரும் ஆஜராகாததைச் சுட்டிக்காட்டி, வழக்கு விசாரணையை ஜூன் 27ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அன்றைய தினம் இந்திய விலங்குகள் நல வாரியச் செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும், தவறினால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் கப்பலேஸ்வரம் சுங்கச்சாவடி வழியாக மாடுகள் கொண்டு செல்வதை தடுத்த காஞ்சிபுரம் எஸ்.பி உத்தரவின்படி, போலீசார் அந்த மாடுகளை தனியார் கோசாலையில் சேர்த்துள்ளதாகவும், தற்போது அந்த மாடுகளை விடுவிக்க முயற்சிக்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கால்நடைகளை விடுவிக்கக்கூடாது என காவல்துறை தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: நாய்களின் உளவியல் குறித்து விரிவான ஆய்வு நடத்த அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!