சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில், கல்வித்துறை ஆரிய - திராவிடம் என்ற தவறான இனக் கொள்கையைப் பரப்புவதாகவும், எனவே அதனை நிறுத்த உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலிங்கம் பாலாஜி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், ஆரியம் - திராவிடம் என இரு கொள்கைகள் இருந்ததாக கூறுவது பொய் எனவும், இது மக்கள் மத்தியில் பிரிவினையை ஊக்குவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், “பாடத்திட்டத்துக்கு என குழு அமைக்கப்பட்டுள்ளது. துறைகளில் உள்ள நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், பாடத்திட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால், குறிப்பிட்ட காலத்துக்குள் அது பரிசீலிக்கப்பட்டு, உரிய முடிவு அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆளுநருக்கு ஆயிரம் போஸ்ட் அனுப்பிய திராவிடர் விடுதலைக் கழகம்!
இதனையடுத்து, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் மனுதாரர் கோரிக்கை மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்றார்.
இவ்வாறு மத்திய மற்றும் மாநில அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், ஆரிய - திராவிட இனக் கொள்கைகளின் தோற்றம், வரலாற்றில் நீதிமன்றம் நிபுணத்துவம் பெற்றதல்ல. இரு கொள்கைகளும் தவறானதா? செல்லுமா? செல்லாதா? என்பதை ஆராயாமல், இந்த வழக்கில் மனுதாரர் கோரும் நிவாரணத்தை நீதிமன்றத்தால் வழங்க முடியாது.
இதைச் செய்ய வேண்டியது கல்வித்துறையில் உள்ள நிபுணர்கள் தானே தவிர, நீதிமன்றத்தால் அல்ல என தெரிவித்தது. மேலும், இந்த வழக்கை மனுதாரரின் கோரிக்கை மனுவாகக் கருதி, அதை 12 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மாநில மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.