மதுரை: சிவகங்கையைச் சேர்ந்த சந்திரசேகர், ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுக்களில், "தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சுகாதாரமான முறையிலும், கலப்படமற்ற முறையிலும் தயாரித்து விற்பனை செய்கின்றனரா என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிப்பர்.
இந்த துறை தொடங்கப்பட்ட போது, சுகாதார ஆய்வாளராக பணியில் இருந்தவர்கள் உணவு பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு இந்த துறையில் பணி விதிகள் உள்ளிட்ட துறை சார்பில் எந்த விதிமுறைகளையும் வகுக்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 119 உணவுப் பாதுகாப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று வெளியிட்டது.
கடந்த 2011ஆம் ஆண்டு சுகாதார ஆய்வாளராகப் பணியில் இருந்தவர்கள் உணவுப் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர்களை பணி வரன்முறைப்படுத்தாமல் நேரடி நியமனம் செய்யக்கூடாது என ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. எனவே, தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தேர்வு செய்யபட்டோரின் பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் குறித்து ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிட்ட பட்டியலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியச் செயலாளர் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : “அற்பமாக மேல்முறையீடு செய்து விளையாடுவதா?”.. தமிழக அரசுக்கு அபராதம் விதித்த உயர் நீதிமன்றம்! - Sarah Tucker College Salary pending