சென்னை: கடந்த 2009ம் ஆண்டு தூத்துக்குடி இடைத்தேர்தலின் போது பேயன்விளை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது அதிமுக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் தற்போது மீன்வளத்துறை அமைச்சராக உள்ள அனிதா ராதாகிருஷ்ணனையும், சேர்த்து விசாரணை நடத்த தூத்துக்குடி அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அனிதா ராதாகிருஷ்ணன் 2022ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், “2009ம் ஆண்டு பேயன்விளை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது சில அதிமுக உறுப்பினர்கள், பிரச்சாரம் செய்ய கூடாது என தகராறு செய்தனர். மேலும், அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு தன்னையும் வலியுறுத்தினர். இதனால், அதிமுக - திமுக உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுக உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், ஆறுமுகநேரி காவல்துறையத்தில் தன்னையும் சேர்த்து 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த போது தனது பெயரை நீக்கி தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நடிகை கௌதமி இடம் பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு: இருவரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி நடுவர் நீதிமன்றம் தனது விளக்கத்தை கேட்காமல், தனது பெயரையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்த்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை இன்று விசாரணைக்காக உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முருகன் வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் பெயரை சேர்க்க கீழமை நீதிமன்றத்துக்கு உரிமை உள்ளது. அதனால் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சம்மன் அனுப்பி குற்றச்சாட்டு பதிவை தொடங்க தூத்துக்குடி நடுவர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.