திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த சின்னவரிகம் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் கண்ணா (32). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆம்பூர் அடுத்த பள்ளித்தெரு பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோயிலில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் சிறையில் இருந்து வெளியே வர வேண்டி வேண்டுதலை நிகழ்த்தியுள்ளார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் சிறையில் இருந்து வெளிவர சிறப்பு அர்ச்சனை செய்து, கோயில் பிரகாரத்தை முட்டியிட்டபடி வினோத் கண்ணா மற்றும் அவரது சகோதரர் வலம் வந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இது குறித்து வினோத் கண்ணா கூறுகையில், "கடந்த 2019 - 2022ஆம் ஆண்டில் சென்னை அம்பேத்கர் கல்லூரியில் சட்டம் பயின்றபோது, கல்விக்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் நான் எனது சான்றிதழ்களை பெற முடியாத நிலையில் இருந்தேன். பலரிடம் நான் உதவி கோரினேன், ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. வேலூரைச் சேர்ந்த அமைச்சர்கள் சிலரிடம் கூட உதவி கோரினேன். ஆனால், அவர்கள் யாரும் எனக்கு உதவி செய்யவில்லை. மாறாக என்னை அசிங்கப்படுத்தினர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் மூலம் திமுக கூட்டணியில் இணையும் மக்கள் நீதி மய்யம்!
அதன் பின்னர், அப்போது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் தனது படிப்பிற்கு உதவுமாறு கேட்டேன். அவர், நான் எந்த ஊர், என் பெயரையும் என்று எதையும் கேட்காமல், எனது கல்விக்கான முழுச் செலவையும் ஏற்று, உடனடியாக பணம் கொடுத்து உதவினார்.
அவர் செய்த உதவியால்தான் நான் தற்போது சட்டம் படித்து முடித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளேன். அமைச்சர் செந்தில் பாலாஜி எனது அண்ணன். என்னைப் போல் ஆயிரம் இளைஞர்களின் கல்விக்கு உதவி செய்துள்ளார். மேலும், இந்த பிரார்த்தனை இன்றுடன் முடிவதில்லை, வாரவாரம் அனைத்துக் கோயில்களிலும் தொடரும்.
வெகு விரைவில் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியாகி, மக்கள் பணியை தொடர வேண்டும்" எனக் கூறினார். பின்னர் பேசிய வினோத் கண்ணாவின் தாயார், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு மூத்த பிள்ளை என்றும், அவர் சிறையில் இருந்து விரைவில் வெளிவர வேண்டும் என கண்ணீர் மல்க கூறினார்.
இதையும் படிங்க: சிவில் நீதிமன்ற நீதிபதியான விஏஓ லூர்து பிரான்சிஸ் மகன்... தந்தையை இழந்த சோகத்திலும் சாதனை!