சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லை. இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
விடுவிக்கக் கோரும் வழக்கு என்பதால் இது தொடர்பாக விரிவாக வாதிட உள்ளதாகவும், அதற்கான வழக்கு விவரங்களைப் படிக்க வேண்டும் என்பதால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் கோரிக்கை வைத்தார்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதத்தை முன்வைக்க தயாராக இருப்பதாக கூறினார். இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று, விசாரணயை செப்டம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் மேலும் அவகாசம் கோரக்கூடாது என அறிவுறுத்தினர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : பாஜக கொள்கையில் சென்னை மாமன்றம்? கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டின் பின்னணி என்ன? - chennai corporation