சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிகிச்சை மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக உள்ள பாலாஜியை, நவம்பர் 13ம் தேதி பெருங்களத்தூரை சேர்ந்த இளைஞர் விக்னேஸ்வரன் (25) கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதனால், மருத்துவர் பாலாஜியின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர் அவர் தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமானார்.
இந்த சம்பவத்தில் கைதான விக்னேஸ்வரன் மீது கொலை முயற்சி, பொது ஊழியரை தாக்கியது உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்னேஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில், பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தியதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இயற்கை பேரிடர் மீது பழி போடாமல், இயற்கையோடு ஒன்றி தான் நாம் வாழ வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஷ்!
விக்னேஸ்வரன் தரப்பில், தன் தாயாருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்காமல், அலட்சியமாக மருத்துவர் செயல்பட்டாதால் ஆத்திரத்தில் குத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, உரிய சிகிச்சை அளிக்காத மருத்துவர் மீது ஏன் வழக்குப்பதிவு செய்யவில்லை? என காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, தினமும் வேலூர் சத்தூவாச்சாரி காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என விக்னேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஸ்வரனிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, '' விக்னேஸ்வரன் தாயார் கிண்டி கலைஞர் அரசு மருத்துவமனையில் சில மாதகாலமாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஸ்வரன் மருத்துவர் பாலாஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மருத்துவர் பாலாஜி அந்த நபரிடம் அலட்சியமாக பதில் அளித்ததால், ஆத்திரமடைந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருத்துவரைக் குத்தியதாக விக்னேஷ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.