சென்னை: சென்னை தீவுத் திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்தத் தடை விதிக்கக்கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயைச் செலவு செய்வது தவறு. சட்ட அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும், லாபமும் இல்லை எனக் கூறி இந்த போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, இந்த போட்டிகள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர், மிக்ஜாம் புயல், மழை, வெள்ள பாதிப்புகளால் டிசம்பர் 15 மற்றும் 16ஆம் தேதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டது. பந்தயத்தை நடத்துவதற்கான சாலைப் பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், டிக்கெட் விற்பனை தொடங்கிவிட்டதாகவும், பந்தயம் நடத்தும் நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் தாக்கல் செய்தார்.
மேலும், டிசம்பர் மாதம் தள்ளிவைக்கப்பட்ட கார் பந்தயம், 2024 ஜூன் மாதத்திற்குப் பிறகு நடத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், பந்தயம் நடத்த ராணுவம் மற்றும் கடற்படையிடம் தடையில்லா சான்று பெற்றுள்ளதாகவும், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையிலிருந்து பந்தய வழித்தடம் 100 மீட்டர் தூரத்தில் உள்ளதால், அந்த இடத்தை கடக்கும் போது ஒலி கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படும் எனவும், மருத்துவமனையும் அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (பிப்.19) பிறப்பித்த தீர்ப்பில், "மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கார் பந்தயம் நடத்துவதற்கு முன் மருத்துவமனை நிர்வாகத்திடம் உரிய முன் அனுமதியைப் பெற வேண்டும். கார் பந்தயம் நடத்துவதற்கான அமைப்புடன் உரிய ஆலோசனை செய்த பின்னர் பந்தயத்தை நடத்த வேண்டும்" என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே மேடையில் விவாதிக்க நான் தயார்..! மத்திய அமைச்சர் பதிலளிக்க தயாரா? - டி.ஆர்.பாலு கேள்வி