சென்னை: அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கரூரில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தடுத்ததாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அரசியல் காரணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குடிமராமத்துப் பணிகளுக்கான ஒப்பந்தம் வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டதால், பணிகளைச் செய்ய விடாமல், அரசு அதிகாரிகளை தாக்கவும் முயன்றுள்ளார். அதனால், முன்ஜாமீன் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சரியாக பணிகள் மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியதால், அரசியல் காரணங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “கடந்த 2022ஆம் ஆண்டு இதே போன்ற வழக்கு முன்னாள் அமைச்சர் சார்பில் தொடரப்பட்டு ரத்து செய்யப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஒரே காரணங்களில் காவல்துறை எப்படி வழக்குப் பதிவு செய்ய முடியும்?
முன்னாள் அமைச்சர் இதேபோன்ற குற்றங்களைத் தொடர்ந்து செய்தால் எப்படி ஜாமீன் வழங்க முடியும்? ஒரு சில வழக்குகள் என்றால் ரத்து செய்ய காரணங்கள் இருக்கலாம். ஆனால், இதுவரை 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. அதனால், முன் ஜாமீன் வழங்க முடியாது.
மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு முதல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன? அதன் தற்போதைய நிலை என்ன” என காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரே அடையாள அட்டை; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - Madras High Court Of Madurai Bench