சென்னை: தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகை கிடைக்காதவர்களின் விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி, பரிசுத்தொகை வழங்கப்படவில்லை என வழக்கு தொடர்ந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகுப்பை பெற டோக்கன் வழங்கிய தேதியில் ரேஷன் கடைக்குச் சென்றபோது கடை மூடப்பட்டிருந்ததால், பரிசுத்தொகையைப் பெற முடியவில்லை என்பதால், பரிசுத்தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த உத்தரவிட வேண்டும் என ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், பரிசுத்தொகையை முறையாக வழங்காமல், தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளின் பொறுப்பாளர்கள் 140 கோடி ரூபாயை அரசுக்குத் திருப்பி அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் முழுவதும் ஒரு கோடி பேருக்கு மேல் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்பட்டது.
இதையடுத்து, யார் யாருக்கெல்லாம் பரிசுத்தொகை கிடைக்கவில்லை என்ற விவரங்களைச் சமர்ப்பிக்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி.. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய காரணம் என்ன?