சென்னை: கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவர் ஈஸ்வரனை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி, உள்துறை செயலாளர், சிறைத்துறை டிஜிபி, வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிடக் கோரி, யசோதா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் அமர்வு, முன்கூட்டி விடுதலை கோரும் விண்ணப்பங்களை உரிய காலக்கட்டத்துக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிப்பது அதிகாரிகளின் கடமை எனவும், இதில் காலதாமதம் ஏற்பட்டால் அது சிறைவாசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் சுட்டிக்காட்டியது.
அதேநேரம், முன்கூட்டி விடுதலை கோரும் விண்ணப்பங்களை வரிசைப்படி எந்த பாகுபாடும் இல்லாமல் பரிசீலிக்க வேண்டும் எனவும், கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, மாநில மற்றும் மாவட்ட அளவில் குழுக்களை அரசு உருவாக்கி, ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க கோரும் மனுவை பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மேலும், தமிழகம் முழுவதும் முன்கூட்டி விடுதலை கோரி சிறைவாசிகள் அளித்து நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை வரிசைப்படி பரிசீலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கூட்டியே விடுவிக்க கோரும் விண்ணப்பத்தின் விவரங்களை பதிவேடு உருவாக்கி பராமரிக்க வேண்டும் என அனைத்து சிறை கண்காணிப்பாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்கும்படி, தமிழக சிறைத்துறை டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: “பரோல் காலத்தில் தப்பித்தார் என்பதற்காக விடுதலை செய்ய மறுக்க முடியாது” - சென்னை உயர் நீதிமன்றம்!