சென்னை: தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த தலைமைத் தேர்தல் அதிகாரியின் உத்தரவை எதிர்த்தும், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிகளை எதிர்த்தும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என்ற விதிகள் முந்தைய தேர்தல்களில் பின்பற்றப்பட்டதா என விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “தேர்தல் விளம்பரங்களை முறைப்படுத்த எந்த விதிகளும் இல்லை எனக்கூறி, தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என 2004ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நீடிக்கிறது என கூற முடியாது. அதன்பின், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மேல் முறையீடு செய்வதற்கு எந்த வழிவகையும் செய்யவில்லை” என வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், “கேபிள் டிவி ஒழுங்குமுறை விதிகளின்படி, தேர்தல் விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்து ஆந்திரா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உச்ச நீதிமன்றம், விளம்பரங்களுக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் என உத்தரவிட்டுள்ளது. வேறு எந்த நீதிமன்றமும், தீ்ர்ப்பாயமும் எந்த வழக்கையும் விசாரிக்க முடியாது.
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை, இந்த உத்தரவு நீடிக்கும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததால், அந்த உத்தரவு 2004ஆம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில், பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்தது” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நகல் எங்கே என கேள்வி எழுப்பினர்.
அதற்கு, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு நகல் இல்லை எனவும், உச்ச நீதிமன்ற இணையதளத்திலும் இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நகலை நாளை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நாளைக்கு (ஏப்ரல் 18) தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: "கூவம் நதி நர்மதை நதிக்கரை போல் மாற்றப்படும்" - மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வாக்குறுதி! - Lok Sabha Election 2024