சென்னை: தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தின் பிரிவு 77 ஏ மற்றும் பிரிவு 77 பி ஆகிய 2 உட்பிரிவுகளை அரசு கடந்த 2022-ம் ஆண்டு சேர்த்தது. இதன்படி போலியான, தவறான சொத்து பத்திரங்கள் குறித்து மாவட்ட பதிவாளரிடம் புகார் செய்தால், அவர் விசாரித்து, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் அந்த பத்திரங்களைச் செல்லாது என அறிவிக்கலாம்.
இந்த சட்டப்பிரிவுகளை எதிர்த்தும், அந்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நித்யா பழனிச்சாமி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.சுந்தர், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த சட்டப் பிரிவுகள் இரண்டும் சட்டவிரோதமானது. நீதிமன்றத்தின் அதிகாரத்தை பறிக்கும் விதமாக உள்ளது. ஒரு பத்திரம் போலியானது என்று முடிவுக்கு வர மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம் கிடையாது. நீதிமன்றம் தான் இருதரப்பிலும் விரிவான விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்து, பத்திரம் போலியானதா? இல்லையா ? என்று முடிவு செய்ய வேண்டும்.
அதுபோன்ற அதிகாரம் மாவட்ட பதிவாளருக்கு கிடையாது. மாவட்ட பதிவாளர் நீதிமன்றத்தைப் போல செயல்பட முடியாது. ஒட்டுமொத்த சொத்து பத்திரங்கள் மீதுதான நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஏற்படுத்தும் விதமாக இந்த சட்டப் பிரிவுகள் உள்ளன. ஒரு சொத்தை ஒருவர் வங்கிக் கடன் மூலம் வாங்கியதாக ஒருவர் புகார் கொடுக்கிறார்.
இதை விசாரிக்கும் மாவட்ட பதிவாளர் அந்த சொத்து பத்திரம் செல்லாது என்று அறிவித்தால் கடன் கொடுத்த வங்கி நிர்வாகம் கடனை திருப்பிக் கேட்கும். ஒரு நபரால் இது உண்மையான பத்திரம் என்று ஒரு வங்கியில் வைத்து கூட பணம் பெற முடியாத நிலையை இந்த சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தும். எனவே, இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த 77ஏ மற்றும் 77பி ஆகிய சட்டப் பிரிவுகள் செல்லாது என்ற அறிவித்து அந்த பிரிவுகளை ரத்து செய்து இன்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்