சென்னை: மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்ட நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 1) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மைனர் சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் தாயார் 2018ஆம் ஆண்டு அளித்த புகாரின் பேரில், போலீசார் அந்நபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு முதல் அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்று வந்தது. இதற்கிடையே, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி மைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டவர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சிறுமி தரப்பில், பெண் மேஜர் ஆன பின்பு 2020ல் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும், தனது சொந்த விருப்பத்தின் பேரில் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் சிறுமி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இந்த வழக்கை ரோமியோ ஜூலியட் கதையுடன் ஒப்பீடு செய்த நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த தீர்ப்பில், “ரோமியோ ஜூலியட் வழக்கு திருமணத்தில் முடிந்து, குழந்தை பிறந்ததன் மூலம் குடும்பம் பெரிதாகிறது. இந்த வழக்கில், நீதித்துறை அமைப்புச் சட்டத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமா? அல்லது மனிதாபிமான அம்சங்களை கையாள வேண்டுமா?” என கேள்வி எழுப்பினார்.
மேலும், இதுபோன்ற வழக்குகளில் கணவருக்கு எதிரான வழக்கை ரத்து செய்வதற்கு நீதிமன்றம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும், இல்லையெனில், சிறுமியின் வாழ்க்கைச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும், எனக் கூறி வழக்கை ரத்து செய்தார்.